ஈழத் தமிழர்களின் சமூக உளவியல் 1
ஈழத்தமிழர்களின் சமூக உளவியல் மற்றும் சமூக உறவு என்பது ஸ்திரமற்ற ஒன்று என்பது மிக வெளிப்படையான ஒரு விசயம். ஈழத்தமிழர் அல்லாத பிற சமூகங்களும் இதை செவ்வனே விளங்கி கொள்ள கூடிய ஸ்திரமற்ற ஒரு நிலை நீண்ட வரலாறாக உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. சமூக உறவில் நெருக்கம் ஏற்படுவது காணக்கூடியவாறு உள்ளது. இவ்வாறான மாற்றம் என்பதுக்கு முற்று முழுதாக வித்திடுவது புற நிலைக்காரணிகள் தவிர அகநிலை மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. புற நிலைத் தாக்கங்கள் அதிகப்படியாக உள்ளதாலும் அதன் கால நீட்சியாலும் அக நிலையில் ஓரளவு மாற்றங்கள் இயல்பாக தோன்றக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றது. இருந்தும் அவ்வாறன எதிர்பார்ப்புகள் பலவீனமாக நகர்ந்து கொண்டுள்ளது.
பொதுவாக ஈழத்தமிழ் சமூக இயங்கு நிலையை எடுத்துக் கொண்டால் அது இரண்டு பிரதான கூற்றில் தனது இயங்கு சக்தியை கொண்டுள்ளது. ஒன்று சாதியம் இரண்டாவது பிரதேசவாதம். இந்த இரண்டும் சமனனான வலுக் கொண்டது. இந்த பிரதான இயங்கு சக்திக்குள் இயங்கும் பல உபபிரிவுகள் ஊடாகவே தனி மனித ஆதிக்கம் சமூக உறவு நிலையில் தனது பங்கை வகிக்கின்றது.
தனி மனிதன் தனக்கான சமூக அடயாளத்தை தனது தனிப்பட்ட திறமையின் நிமிர்த்தம் அல்லது தனிப்பட்ட செயற்பாடுகள் நிமிர்த்தம் முன்வைப்பது என்பது இந்த சமூகத்தில் வலுவற்ற ஒரு விடயம். அவன் ஒரு அறிவாளியாக இருந்தாலும், அவன் ஒரு கல்விமானாக இருந்தாலும், அவன் ஒரு அரச உத்தியோகத்தை கொண்டவனாக இருந்தாலும், அவனது அந்தஸ்தை நிலை நாட்ட அவனுக்கு அவனது ஊரும் அவனது சாதியும் பிரதானமாக தேவைப்படுகின்றது.
இவ்வாறன இயக்கம் என்பது ஒரு சுற்று வடிவத்தை கொண்டது. அதுவானது ஒரு பிரதேசம் அல்லது சாதி என்பது கல்வியில் உயர் நிலையையும் அதிகப்படியான அரச உத்தியோகத்தையும் கலை கலாச்சார விசயங்களில் அதிக ஈடுபாடும் வசதிவாய்ப்பில் உயர்வும் கொண்டதாக இருக்கும் போது அதன் அடயாளம் மேற்கண்ட விசயங்களாக கருத்துருவாக்கம் பெறுகின்றது. பின்னர் மேற்கண்ட விசயங்களில் அதிக ஈடுபாட்டை முயற்ச்சித்து அந்த பிரதேச வாசி போலும் அந்த சாதி போலும் மாறுதல் என்ற இயக்கத்தை கொண்டது. சுருங்க கூறின், பிரதேசம் மற்றும் சாதியை கொண்டு ஏனையவற்றை பெறுதல் அல்லது ஏனையவற்றை பெறுவதின் ஊடாக அந்த பிரதேசம் அல்லது சாதிக்கு நிகரான ஒரு அந்தஸ்தை நிலைநாட்ட முயற்ச்சித்தல் என்ற சுற்றை கொண்டது இந்த சுற்று அமைப்பு.
இவ்வாறான சமூக இயங்கியல் அமைப்பில் நீண்டகாலம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவது தான் ஈழத்தமிழனின் சமூக உளவியல் இயக்கம். இது சமூக உறவில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத ஒரு இயக்கமே. இந்த சுற்று இயக்கத்தில் என்றும் இடைவெளியை கடைப்பிடிப்பதின் ஊடாகவே அந்தஸ்தை நிலைநாட்ட முடியும் என்ற கோட்பாடு வலுவாக உள்ளது. உதாரணமாக சாதியிலும் பிரதேசத்திலும் பின்தங்கிய ஒருவர் அவரது குடும்பத்தின் கடுமையான உழைப்பினாலும் தியாகத்தாலும் பேராசிரியர் என்ற நிலையை அடைந்தார். அவரிடம் கல்வி கற்ற ஒருவர் சாதியாலும் பிரதேசத்தாலும் உயர்ந்தவர் என்ற அடயாளத்தை பெற்றவர். கீழான நிலையில் உள்ளவர் மேலான நிலையில் உள்ளவருக்கு குருவாக ஆசானாக விளங்குகின்றார். இவ்வாறு தொடர்ந்த இவ்விருவரின் உறவில் மேலானவர் மேற்கு நாடு ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகின்றார். கீழானவர் ஈழத்தில் இருக்கின்றார். அவர்களது துறைசார்நத தேவைக்காக மாணவர் குருவை சந்திக்க போனபோது குருவின் வீட்டில் அவர் தேனீர் அருந்துவதில்லை. சாப்பிடுவதில்லை.
இந்த சம்பவம் எமது சமூகத்தின் உளவியல் சுற்றியக்கத்தை விளங்கி கொள்ள மிகவும் பயனுள்ள ஒன்று. சமூக உறவில் இடைவெளியை குறைப்பதற்காக கல்வி உத்தியோகம் வசதிவாய்ப்பு என்பதை கடும் முயற்ச்சியினூடாக பெற்றாலும் சமாந்தர நிலையை அடையமுடியாது என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. சமாந்திர நிலை என்பதும் சமூக ஒற்றுமையும் நெருக்கமும் அந்தஸ்தை பாதிக்கும் விடயமாக அறிவின் உயர்மட்டம் வரை வியாப்பித்து நிற்கின்றது. மிக மோசமானதாகவும் மிக அருவெருப்பானதாகவும் உள்ள ஒரு சமூகம் சார்ந்த கண்ணோட்டம் இன்றைய நிலையில் ஈழத்து புத்தியீவீகள் மத்தியில் இருப்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.
அதற்கு அடுத்தபடியாக புலம் பெயர் தேசத்தில் வாழும் மக்கள் தமது பிள்ளைகளை வைத்தியராகவும் என்ஜீனியராகவும் மாற்றுவதற்கு இந்த உளவியல் சுற்றியக்கம் மூல உந்து சக்தியாக உள்ளது. பரதநாட்டிய கற்றலில் என்றுமில்லாத ஈடுபாடும் இந்த சுற்றுக்குள் நன்கு அடங்குகின்றது. ஆனால் முடிவில் எதிர்பார்க்கும் மன அமைதியும் சந்தோசமும் அந்தஸ்தும் நிராகரிக்ப்படும் என்பது கடந்த கால வரலாறு.
சமூக அந்தஸ்த்து பெறும் முயற்ச்சியில் இறுதியில் படுதோல்வி அடையும் தருணஙகளில் மிக மோசமான மன அழுத்தமும் தனிமை உணர்வும் எதிர்காலத்தில் மிக அதிகளவு அபாயங்களை தோற்றுவிக்கும் என்பது எதிர்பார்க்க கூடிய ஒன்று. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமக்கான சமூக அந்தஸ்தை ஒரு குறுகிய வட்டத்தினுள் கட்டி வளர்க்க முற்படுகின்றனர். அதாவது ஈழத்தில் உள்ளது போல் சாதிய வட்டத்தை ஒருங்கமைத்தல், ஊர் வட்டத்தை ஒருங்கமைத்தல், பிரதேச வட்டத்தை ஒருங்கமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் அந்த வட்டத்தினுள் அந்தஸ்தை நிலை நிறுத்த முற்படுதலும் பிரகாசிக்க முற்படுதலும் இவற்றுள் அடங்கு கின்றது.
ஈழத்தமிழனை தமிழர் என்று சாதி பிரதேசவாத வர்க்க வேறுபாடுகளை கடந்து சுட்டிக்காட்டுவது புறநிலைக் காரணிகளே. சிங்கள அரசானாலும் சரி வேற்று நாடுகளானாலும் சரி இவர்களின் அடையாளம் தமிழர் இவர்கள் தமிழினம் என்று அணுகுகின்றது தவிர ஈழத்தமிழன் தன்னை தமிழன் என்று அகநிலையில் முன்நிறுத்துபவன் அல்லன். புற நிலைத் தேவைகளுக்கு ஏற்ப தன்னை தமிழன் என்று காட்டிக்கொள்ள விரும்புகின்றான். இதை செவ்வனே விளங்குவதென்றால் ஒருவருக்கு புகலிட தஞ்சம் தேவைப்படும் பட்சத்தில் அவன் தன்னை தமிழன் என்று முன்வைப்பான் அதே அவனுக்கு திருமணம் தேவைப்படும் போது சாதி பிரதேசவாதத்தை முன்வைப்பான். தாம் தமிழர்கள் அல்லது தமிழினம் என்ற அடிப்படையில் சாதி கலந்து திருமணம் செய்வதை விரும்புவதில்லை. அந்தஸ்த்தில் வசதிவாய்ப்பில் சமநிலை இருந்தும் இன அடிப்படையை முன்வைத்து அவ்வாறு நடப்பதில்லை.
இன அடயாளம், அதன் வலு என்பது ஈழத்தமிழர்களின் அகநிலை உளவியல் இயக்கத்தில் மிக பலவீனமான ஒன்று. சிங்கள அரசு தமிழர் என்று இன வெறுப்பை காட்டுமளவில் ஈழத்தமிழன் அகநிலையில் தன்னை தமிழன் என்று உணர்ந்தவன் அல்லன் என்பதே பிரதானமான உண்மை. ஆனால் புறநிலைத் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போது தமிழன் தன் இன உணர்வை முடிந்தளவு ஒருமுகப்படுத்துகின்றன். இவைகள் தேவைகளுக்கேற்ப அணுகப்பட வேண்டிய விடயம் தவிர தமிழனின் பொதுத் தன்மை அல்ல. கடந்த முப்பதாண்டுகால போராட்டம் இவ்வாறு அணுகப்பட வேண்டியது அவசியம்.





tamil சொன்னது,
ஜூன் 9, 2008 இல் 8:33 மு.பகல்
vanakam……………….www.tamilsangami.blogspot.com