சிரிப்போம் வாழ்வில் சிறப்போம்

மனம்விட்டுச் சிரிக்க எம்மால் முடிகின்றதா?
வயிறு குலுங்கச் சிரிப்பது என்கிறார்களே? நம்மில் எத்தனை பேருக்கு அப்படி, அடிக்கடி சிரிக்க முடிகின்றது? வெளிநாட்டு வாழ்க்கை என்று ஆரம்பித்து, இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு விடடதில், நம்மில் பலர் சிரிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவலம் பலபேருக்குத் தெரியவருவதில்லை. பல அதிருப்திகளால், நம்மால் மனம் விட்டுச் சிரிக்க முடியாத நிலையொன்று நம்முடன் வந்து ஒட்டியிருக்கின்றது.
ஒரு குழந்தை பிறந்து நாலாவது மாதத்தில் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றது என்கிறார்கள். அப்படி ஆரம்பிப்பது எவ்வளவு காலம் நமது வாழ்க்கையில் தொடர்கின்றது?வாழ்க்கையின் பிற்பகுதியிலும் மனம் விட்டுச் சிரித்து வாழும் அளவுக்கு, வாழ்வின் சுமைகளை நம்மால் இறக்கி வைக்க முடிகின்றதா? ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பார்த்தோ அல்லது நகைச்சுவையான பேச்சு ஒன்றைக் கேட்டோ நாம் சிரித்ததாலும், வேறுபல காரணங்களுக்காகவும் நாம், சிரிக்கின்றோம்.
ஒரு இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்று நாம் உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன், நமது முகத்தில் மலர்வது என்ன, சிரிப்புத்தானே?
இன்னொருவர் பேசியதை நாம் புரிந்து கொண்டுவிட்டோம், அல்லது நாம் பேசி முடித்து விட்டோம் என்பதை வெளிப்படுத்த நாம் முகத்தில் வரவழைத்துக் கொள்வது சிரிப்பைத்தானே?
சிரிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார்கள். மனம் விட்டுச் சிரிக்கும்போது முகத்தின் 15 நார்களுக்குப் பயிற்சி கிடைக்கின்றன.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில் என்ற வள்ளுவரின் குறளை நோக்கும்போது, நமக்குத் துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும் என்றல்லவா அவர் சொல்லியிருப்பதை நினைவுகூரத் தோன்றுகின்றது. இது எப்படி வாழ்க்கையில் சாத்தியப்படும்? துன்பம் என்ற சுமை மனதை அழுத்த எப்படி நம்மால் மனம் விட்டுச் சிரிக்க முடியும்?
துன்பம் வரும்வேளை அதனை எள்ளிநகையாடுங்கள். அப்படிச் செய்தால் அதன் பின் விளையப்போவது ஒப்பற்ற நன்மையாக இருக்கும் என்பதையே இங்கு வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அவர் சிரிக்கச் சொல்லவில்லை. எள்ளி நகையாடச் சொல்கின்றார். அவமானம் அடையும்படி கேலி செய்து சிரிப்பதே எள்ளி நகையாடுதல் என்று பொருள்படுகின்றது. எனவே துன்பம் வரும்போது, வாழ்க்கை ஒரேயடியாக அழிந்துவிட்டதுபோல , மனம்; இடிந்துபோய் உடகார்ந்து விடாமல், துன்பத்திற்குப் பின்பு இன்பம் வரத்தானே வேண்டும் என்ற மனஉத்வேகத்தோடு, அதை எதிர்கொண்டு, வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள் என்பதையே இங்கே வள்ளுவர் சொல்ல வருகின்றார்.

அடடா சிரிப்பில்தான் எத்தனை வகை? தமிழ் சினிமாவில் , காலத்தால் அழியாத நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் சிரிப்புகளை வகைப்படுத்திப் பாடிய அட்டகாசமான பாடல் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழந்திடாதே என்ற இன்னொரு சினிமாப் பாடலின் தத்துவ வரிகளும் காதை நிறைக்கின்றன. அப்பப்பா அற்புதமான வரிகள். நாம் சிரிப்பதும் நம்மைப் பார்த்து பிறர் சிரிப்பதும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடையல்லவா தருகின்றது?

சிரிப்பது ஒரு தொற்றுவியாதியைப் போன்றது. முகம்சோர்ந்து நிற்பவரையும், இன்னொருவரின் நகைச்சுவையான பேச்சு கவர்ந்திழுத்து, அவரையும் கொல்லெனெச் சிரிக்க வைத்துவிடுகின்றது. அந்த முகமலர்ச்சி, ஒரு தனி அழகையும் தந்துவிடுகின்றது. சிரிப்பின் பேராற்றல் இது. நகைச்சுவையாக, அதேசமயம் பிறர்மனம் புண்படாத வகையில் மிக நாகரிகப் பேசிப் பழகுவோரைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் சுற்றியபடிதான் இருக்கும். நகைச்சுவையில் மயங்காதோர் யாருமே இல்லை.

பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர் இலக்கியமென எழுதிய அருமையான வரிகளில் சில வரிகளைப் பாருங்கள்.
வகுத்து வகுத்து சொல்வார்கள் அதன் வயணத்தை ஆராய வேண்டும்
பகுத்தறிவு வழியாச் சொத்தாம் அதைப் பாழாக்கக் கூடாது தம்பி
நகைத்திட எதையும் செய்யாதே மிக நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
பிரித்துப் பிரித்துச் சொல்வார்கள். நீ சரியான விபரத்தை (வயணம்) அறிய வேண்டும். பிரித்தறியும் திறன் என்பது காலத்தால் அழியாச் சொத்து. நீ அதை அழித்துவிடக்கூடாது. பிறர் உன்னைப் பார்த்து கேலி செய்து சிரிக்குமகவிற்கு உன் செயற்பாடுகள் அமைந்துவிடாது, நீ நல்லொழுக்கம் மிகுந்தவனாய் வாழவேண்டும் தம்பி என்று அறிவுரை கூறுகின்றார் பாவேந்தர்.
சிரிப்பின் மகத்துவம் தெரிகின்றதா? சிரித்து வாழ்வோம் சிறப்பாய் வாழ்வோம்.